கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம்


கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம்
x
தினத்தந்தி 17 July 2020 4:57 PM IST (Updated: 17 July 2020 4:57 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

திருவனந்தரம்

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  என்ஐஏ விசாரணை ஒருபுறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.  

இந்த வழக்கில் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும் தகவல் தொடர்பு துறை செயலாளராக இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனால் சிவசங்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கருக்கு கேரள தங்கக் கடத்தல் வழக்கில்  நேரடியாக தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுடனான நெருக்கம் காரணமாக வழக்கில் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

கேரள முதல்வர் அலுவலகத்திற்கும், தங்கம் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவுக்கும் தொடர்பு இருப்பதால், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன. தங்க கடத்தலுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கேரள மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சட்டசபை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதால், கேரள சட்டசபையில் பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வர விரும்புவதாக கூறப்பட்டுள்ளது


Next Story