அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 97 பேர் பலி


அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 97 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2020 5:57 PM IST (Updated: 17 July 2020 5:57 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மொத்தம் 97 பேர் பலியாகி உள்ளனர்.

கவுகாத்தி,

அசாமில் பருவமழை காலம் தொடங்கி பெய்த தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் அசாமில் பல மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வெள்ளத்திற்கு 27 மாவட்டங்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளன.  இது கடந்த ஆண்டை விட கடுமையான பாதிப்பு ஆகும் என தெரிவித்து உள்ளது.

அசாமில் வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.  இதனால், மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அசாமில் வெள்ள பாதிப்புக்கு 71 பேர் பலியாகி உள்ளனர்.  39 லட்சம் மக்களும் பாதிப்படைந்து உள்ளனர்.  அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக 303 நிவாரண முகாம்கள் மற்றும் 445 நிவாரண வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  அவற்றில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.  இதேபோன்று கால்நடைகளுக்கான தீவனங்களும் வழங்கப்படுகின்றன.  தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

வெள்ளம் தவிர்த்து கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் நடந்துள்ளன.  இதில் சிக்கி 26 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மொத்தம் 97 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story