கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 4-வது இடத்திற்கு முன்னேறிய கர்நாடகம்
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 4-வது இடத்திற்கு கர்நாடகம் முன்னேறி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
குறிப்பாக கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க பெங்களூரு உள்பட 7 மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் 51 ஆயிரத்தை தாண்டி இருப்பதன் மூலம் நாட்டிலேயே கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் மராட்டிய மாநிலத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 281 பேர் உள்ளனர். 2-வது இடத்தில் தமிழ்நாடு 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 645 பேருக்கு பாதிப்பு இருக்கிறது. 4-வது இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 51 ஆயிரத்து 422 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
அதாவது 4-வது இடத்தில் இருந்த குஜராத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கர்நாடகம் 4-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதே நிலைமை கர்நாடகத்தில் தொடர்ந்தால் செப்டம்பர் மாதத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய அறிவியல் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் கர்நாடகத்தில் 71 ஆயிரத்து 300 பேர் கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார்கள் என்றும், மற்றவர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்திருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநில மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story