இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது
இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது.
புதுடெல்லி,
ஒரே நாளில் இரண்டு மைல் கல்களை இந்தியா அடைந்துள்ளது. முதல் மைல் கல், கவலை அளிக்கக்கூடியது. இரண்டாவது மைல் கல், மகிழ்ச்சி தரக்கூடியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து விட்டது என்பதுதான் முதல் மைல்கல்.
நாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக மராட்டியமும், தமிழகமும் திகழ்வது இரு மாநிலங்களுக்கும் சற்றே கவலை தரக்கூடிய ஒன்றுதான்.
இவ்விரு மாநிலங்களை தொடர்ந்து இப்போது கர்நாடகத்திலும், பீகாரிலும் தினமும் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு புதிதாய் பாதிப்பு. மொத்த பாதிப்பு, 10 லட்சத்து 3 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.
இப்படியே கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டே சென்றால் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
இதற்கு ஒரே பதில் தடுப்பூசிதான்.
இரண்டாவது மைல்கல்...
அந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி உள்பட 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்று, அரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ். என்று அழைக்கப்படுகிற பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகும்.
அங்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு 10 நாட்களாக நடந்தது. இதில் சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் 22 பேரின் மருத்துவ வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் 8 பேர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பாக அவர்கள் வைரசால் முன்னர் பாதிக்கப்பட்டுள்ளார்களா, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்களா என்பதையெல்லாம் ஆராய்ந்து 3 பேரை தேர்வு செய்திருந்தார்கள்.
அந்த 3 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி வெற்றிகரமாக நேற்று போடப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போடும் சோதனை தொடங்கி உள்ளது. இதுதான் இரண்டாவது மைல் கல். மகிழ்ச்சி தரக்கூடியது.
மந்திரி தகவல்
இதை அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் டுவிட்டரில் அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி (கோவேக்சின்) பரிசோதனை இன்று (நேற்று) தொடங்கியது. 3 பேருக்கு ஊசி போடப்பட்டது. அவர்கள் அனைவரும் நன்றாக பொறுத்துக்கொண்டனர். எதிர்மறையான விளைவுகள் எதுவும் இல்லை” என கூறி உள்ளார்.
“இந்தியாவில் உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியை வெற்றிகரமான மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை தொடங்கி உள்ளது” என அந்த நிறுவனமும் தெரிவித்துள்ளது.
ரோட்டக் பி.ஜி.ஐ.எம்.எஸ்.சில், மேலும் 14 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. அதற்கான அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.
இதே போன்று பிற பரிசோதனை தளங்களிலும் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போட்டு பரிசோதிப்பது அடுத்த சில நாட்களில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story