உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட தொட முடியாது -லடாக்கில் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்
இந்தியா பலவீனமான நாடு அல்ல எனவும், இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட உலகின் எந்த ஒரு சக்தியாலும் தொட முடியாது என்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் லடாக்கில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
லே,
லடாக்கின் கிழக்கே சீன ராணுவம் ஊடுருவியதால் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபட்டது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதால், எல்லையில் இரு தரப்பும் படைகளை விலக்கி வருகின்றன. கடந்த 6-ந்தேதி முதல் நடந்த முதற்கட்ட படை விலக்கல் முற்றுப்பெற்ற நிலையில், அங்கு முற்றிலும் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நேற்று முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் முதற்கட்டமாக நேற்று அவர் லடாக்கில் எல்லைப்பகுதிகளை ஆய்வு செய்தார். இதில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
மேலும் ராணுவத்தின் தயார் நிலை மற்றும் கண்காணிப்பு நிலவரங்கள் குறித்து மூத்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது லடாக் எல்லையில் தற்போது நிலவும் சூழல் குறித்து வடக்கு பிராந்திய கமாண்டர் யோகேஷ் குமார் ஜோஷி,, 14-வது படைப்பிரிவு கமாண்டரும், சீன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருபவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் எல்லை நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் லடாக்கில் பங்கோங்சோ ஏரிக்கரையில் அமைந்துள்ள லுகுங் பகுதியில் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் மத்தியில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய-சீன படைகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதலில் எங்கள் வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களுக்கு 130 கோடி இந்தியர்களும் கடன்பட்டு உள்ளனர். அவர்களது தியாகத்தால் நாங்கள் அனைவரும் வேதனையடைந்துள்ளோம்.
கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதில் இதுவரை என்ன முடிவுகள் கிடைத்தாலும், இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிந்தால், அதைவிட சிறந்தது வேறெதுவும் இல்லை. ஆனால் இதில் எந்த அளவுக்கு பிரச்சினை தீர்க்கப்படும் என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது.
ஆனால் இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட உலகின் எந்த ஒரு சக்தியாலும் தொட முடியாது என்பதை உங்களுக்கு உறுதியளிக்க முடியும். இந்தியா பலவீனமான நாடு அல்ல. இங்கு வீரர்கள் புரிந்த ஒப்பற்ற தியாகம் வீணாய் போவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
எந்தவொரு நாட்டிலும் இந்தியா ஊடுருவவோ, எந்த நாட்டின் நிலத்தை ஆக்கிரமிக்கவோ இல்லை. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் (வாசுதேவ குடும்பகம்) என்ற அமைதியின் செய்தியையே உலகுக்கு இந்தியா வழங்கி உள்ளது.
ஆனால் இந்தியாவின் சுயமரியாதைதையை யாரும் காயப்படுத்த விரும்பினால், அதை பொறுத்துக்கொள்ளமாட்டோம். எந்த நிலையிலும் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
முன்னதாக ஸ்டாக்னா பகுதியில் இந்திய படைகளின் தயார் நிலையை வெளிப்படுத்தும் வகையில் ராணுவமும் மற்றும் விமானப்படையும் இணைந்து மிகப்பெரிய பயிற்சி ஒன்றை ராஜ்நாத் சிங்குக்கு நடத்திக்காட்டின. இதில் தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.
அத்துடன் பல்லாயிரக்கணக்கான மீட்டர் உயரத்தில் தரைப்படை வீரர்களும் தங்கள் திறமையையும், தயார் நிலையையும் ராணுவ மந்திரி முன் வெளிப்படுத்தினர். மேலும் விமானப்படை சார்பில் அப்பாச்சி, ருத்ரா, எம்.ஐ.17 வி5 ஹெலிகாப்டர்கள் போன்றவையும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.
இது குறித்து பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘இன்று (நேற்று) லேவுக்கு அருகிலுள்ள ஸ்டக்னாவில் நடத்தப்பட்ட படை இறக்கம் மற்றும் பிற இராணுவ பயிற்சியில் இந்திய இராணுவத்தின் தீரம் மற்றும் சீற்றத்தை கண்டுகொண்டேன். அத்துடன் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் பெற்றேன். இந்த தீரமிக்க வீரர்களைப்பார்த்து பெருமை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
ராணுவ மந்திரியின் இந்த பயணத்தில் முப்படைத்தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story