ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம்; மத்திய மந்திரி மீது போலீசில் புகார்


ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம்; மத்திய மந்திரி மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 18 July 2020 3:53 AM IST (Updated: 18 July 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடப்பதாக வெளியான ஆடியோவை தொடர்ந்து, மத்திய மந்திரி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

ஜெய்ப்பூர், 

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவியும், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு உள்ளார். அவர் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறுகிறார்.

சச்சின் பைலட்டின் துணையுடன் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டி உள்ள காங்கிரஸ் கட்சி அசோக் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கவைத்து இருக்கிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.கள் அரியானா மாநிலம் மனேசரில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆடியோ உரையாடல்கள்

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் குதிரை பேரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் நேற்று 2 ஆடியோ உரையாடல்கள் வெளியாயின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, குதிரை பேரத்தின் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து அசோக் கெலாட் அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது தொடர்பாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத், சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. பன்வர்லால் சர்மா ஆகியோர் தொலைபேசியில் பேசி இருப்பதாகவும், அந்த ஆடியோ வெளியாகி இருப்பதாகவும், எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முதலில் இது தொடர்பாக பன்வர்லால் சர்மா பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சஞ்சய் ஜெயினுடன் பேசியதாக காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி தெரிவித்தார்.

போலீசில் புகார்

இதைத்தொடர்ந்து, இந்த ஆடியோ உரையாடல் விவகாரம் குறித்து மகேஷ் ஜோஷி போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் கஜேந்திர சிங் என்ற பெயர் இடம்பெற்று இருந்தாலும், அது மத்திய மந்திரிதானா? என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த புகார் தொடர்பாக பன்வர்லால் சர்மா, சஞ்சய் ஜெயின், கஜேந்திர சிங் செகாவத் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் கஜேந்திர சிங் செகாவத் என்ற பெயர் இடம்பெற்று இருந்தாலும், அவர் மத்திய மந்திரி என்று குறிப்பிடப்படவில்லை.

புகார் மனு மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சதி உள்ளிட்ட பிரிவுகளில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரி அசோக் ரத்தோர் தெரிவித்தார்.

மத்திய மந்திரி மறுப்பு

இதற்கிடையே, அந்த ஆடியோ உரையாடலில் இடம் பெற்றுள்ள குரல் தன்னுடையது அல்ல என்றும், எனவே எந்த விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாகவும் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறி உள்ளார்.

இதேபோல் பன்வர்லால் சர்மாவும் அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்று மறுத்து இருக்கிறார்.

2 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

இந்த ஆடியோ உரையாடல் வெளியானதை தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு அரசை கவிழ்க்க சதி செய்ததாக கூறி பன்வர்லால் சர்மா, விஸ்வேந்திர சிங் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் நேற்று காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த தகவலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், விளக்கம் கேட்டு அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஐகோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே, கொறடா உத்தரவை மீறி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரஜித் மகந்தி, நீதிபதி பிரகாஷ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

வக்கீல்கள் விவாதத்துக்கு பின், வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக சபாநாயகர் சி.பி.ஜோஷி சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் மீது செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை சபாநாயகர் நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டார் என்று உறுதி அளித்தார்.

Next Story