கொரோனா பயம்: உறவினர்கள் கைவிட்டதால் இறந்த கணவரின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்ற மனைவி


கொரோனா பயம்: உறவினர்கள் கைவிட்டதால் இறந்த கணவரின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்ற மனைவி
x
தினத்தந்தி 18 July 2020 11:05 PM IST (Updated: 18 July 2020 11:05 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் உறவினர் கைவிட்டதால், இறந்த கணவரின் உடலை தள்ளுவண்டி உதவியுடன் மனைவி, மகன் தகனம் செய்யும் இடம் வரை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது, தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சத்தால் கேள்விக்குறியாகி வருகிறது.

மேலும், பல இடங்களில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில் உடல்களை பெறுவதில் உறவினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சில இடங்களில், தொற்றால் இறந்த உடல்களுக்கு எவ்வித மரியாதையும் இன்றி சவக் குழிக்குள் தூக்கிப் போடும் அவல காட்சிகளும் அரங்கேறி வருகிறது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் அதானி நகர் சாலையில் நெஞ்சை பதபத  வைக்கும் காட்சி நடந்தது. உறவினர்கள் கைவிட்டதால், இறந்த கணவரின் உடலை தள்ளுவண்டி உதவியுடன் மனைவி, மகன் தகனம் செய்யும் இடம் வரை கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது.

55 வயதான சதாஷிவ் ஹிராட்டி என்பவர் கடந்த 15-ம் தேதி இரவு அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் அருகில் உள்ள சிக்காட்டிக்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனி அறையில் சதாஷிவ் ஹிராட்டி தங்கி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலையில் சதாஷிவ் ஹிராட்டியை எழுப்புவதற்காக, கதவை அவரது மனைவி  தட்டினர். பலமுறை கதவை தட்டியும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீட்டார் உதவியுடன் கதவை திறந்து பார்த்தனர். அப்போது நாற்காலியில் சதாஷிவ் ஹிராட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் மாரடைப்பால் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர்கள் சதாஷிவ் ஹிராட்டி குடும்பத்திற்கு உதவ மறுத்துவிட்டதாக தெரிகிறது. கொரோனா தொற்றால் இறந்திருப்பார் என்ற பயம் காரணமாக அவர்கள் உதவவில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து சதாஷிவ் ஹிராட்டி உடலை ஒரு தள்ளுவண்டிக்காரர் உதவியுடன் தகனம் செய்யும் இடம் வரை மனைவியும், மகனும் கொண்டு சென்றக்காட்சி மனதை கலங்க வைக்கிறது.


Next Story