திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை என தகவல்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை என தகவல்
x
தினத்தந்தி 19 July 2020 10:55 PM IST (Updated: 19 July 2020 10:55 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவுவதை தடுக்கும்பொருட்டு பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் உள்ள மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திய மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 2 நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 10-ந் தேதியில் இருந்து பொது தரிசனத்தில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள்.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சமூக விலகலை கடைபிடித்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு (வயது 67) நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தரிசனத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தேவஸ்தான தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கிற்கு இடையே கடந்த 8 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 2 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளதாகவும் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story