ஸ்ரீஹரிகோட்டாவில் 2 பணியாளர்களுக்கு கொரோனா வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு


ஸ்ரீஹரிகோட்டாவில் 2 பணியாளர்களுக்கு கொரோனா வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 20 July 2020 3:45 AM IST (Updated: 20 July 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2 பணியாளர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மையம், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றுபவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் உள்ள சூலூர்பேட்டையில் உள்ள 3 குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுவர்ணமுகி நகரில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் 2 பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள திட உந்துவிசை விண்வெளி பூஸ்டர் ஆலையில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் உடனடியாக நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் ஒரு பணியாளரின் மனைவிக்கும், மகனுக்கும் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மையத்தில் 50 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் இருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருந்ததால் அதை மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது. தற்போது அந்த இடம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

சதீஷ்தவான் ஆய்வு மைய கட்டுப்பாட்டாளர் வி.கும்பகர்ணன், நோய் பரவுவதை தடுத்து நிறுத்த பல்வேறு பணிக்குழுக்களை ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கும், அவர்களின் வீடுகள், இருப்பிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் இந்த குழுவினர் ஈடுபடுகின்றனர்.

அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான ஊழியர்கள் மட்டுமே விண்வெளி ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

Next Story