ஜி-20 நிதி மந்திரிகள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு


ஜி-20 நிதி மந்திரிகள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 July 2020 3:30 AM IST (Updated: 20 July 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கிகளின் கவர்னர்கள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

புதுடெல்லி,

ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் அந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் கவர்னர்கள் கூட்டம், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சவுதி அரேபியா தலைமை தாங்கியது.

இந்த கூட்டத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். கூட்டத்தில், சர்வதேச பொருளாதார நிலவரம், கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், முதல் அமர்வில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

கொரோனா வைரசை ஒடுக்க ஜி-20 நாடுகள் செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்பதை கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில் அனைத்து நிதி மந்திரிகளும் ஆதரித்தனர்.

இந்த செயல் திட்டம், கொரோனாவுக்கு எதிரான ஜி-20 நாடுகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டது.

பொருளாதார நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள், சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகியவை இதன் தூண்களாக இருக்கும். இந்த செயல்திட்டம், எக்காலத்துக்கும் பொருத்தமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.

கொரோனா சூழ்நிலையிலும், தேவையையும், வினியோகத்தையும் சமச்சீராக கொண்டு செல்லும் அளவுக்கு செயல்திட்டம் இருக்க வேண்டும்.

இந்த சமச்சீர் தன்மையை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் கடன் திட்டங்கள், நேரடி பண பலன்கள், வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள் ஆகியவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இரண்டாவது அமர்வின்போது, மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளை நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் 42 கோடி மக்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 80 கோடி ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை ரே‌‌ஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story