திருப்பதியில் ஊழியர்களுக்கு கொரோனா: பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரை!!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் தரிசனம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்திட ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரிய ஜீயர் சடகோப ராமானுஜருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் தரிசனத்தை ரத்து செய்யுமாறு ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு விரைவில் தடைவிதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஊரடங்கிற்கு இடையே கடந்த 8ம் தேதி முதல் திருப்பதியில் இதுவரை 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story