2.46 சதவீதம் பேர் உயிரிழப்பு உலகிலேயே கொரோனா மரணம் குறைவான நாடு, இந்தியா


2.46 சதவீதம் பேர் உயிரிழப்பு உலகிலேயே கொரோனா மரணம் குறைவான நாடு, இந்தியா
x
தினத்தந்தி 21 July 2020 4:45 AM IST (Updated: 21 July 2020 2:17 AM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 11 லட்சத்தை தாண்டி விட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 664 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இத்துடன், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கொரோனாவில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆனவர்கள் விகிதம் 62.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போது, 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் மட்டுமே கொரோனாவால் ஆஸ்பத்திரிகளிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுபவர்களை விட 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் விகிதம் 2.46 சதவீதமாக குறைந்துள்ளது. உலக அளவில் கொரோனா மரணங்கள் குறைவான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு நோயாளிகளை கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதும், கொரோனாவை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும்தான் காரணங்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன், 11 மாநிலங்களில் 43 பெரிய ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இணையவழியில் ஆலோசனை வழங்குவதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

Next Story