சந்தைக்கு வந்தவுடன் யார் யாருக்கு தடுப்பூசி போடுவது என்று இப்போதே கணக்கிட வேண்டும் பெண் தொழிலதிபர் கிரண் மசூம்தார் ஷா யோசனை


சந்தைக்கு வந்தவுடன் யார் யாருக்கு தடுப்பூசி போடுவது என்று இப்போதே கணக்கிட வேண்டும் பெண் தொழிலதிபர் கிரண் மசூம்தார் ஷா யோசனை
x
தினத்தந்தி 21 July 2020 4:30 AM IST (Updated: 21 July 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வந்தவுடன், யார் யாருக்கு தடுப்பூசி போடுவது என்று இப்போதே கணக்கிட வேண்டும் என்று பிரபல பெண் தொழிலதிபர் கிரண் மசூம்தார் ஷா யோசனை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ‘பயோகான்‘ மருந்து உற்பத்தி நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மசூம்தார் ஷா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைப்பது எல்லாமே யூகத்தில்தான் உள்ளது. நமது நாட்டில் பாரத் பயோடெக், சைடஸ் கடிலா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் நல்ல பலனை அளித்தால், இந்த ஆண்டு இறுதியிலேயே தடுப்பூசி கிடைத்துவிடும். இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு மத்திவரை ஆகிவிடும்.

நமது மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தால் கூட 20 கோடி முதல் 30 கோடி பேருக்கு போட வேண்டி இருக்கும். ஒருவருக்கு 2 ‘டோஸ்‘ கொடுக்க வேண்டி இருக்கும். அது விலை மலிவாக இருக்காது.

அதற்கான செலவை மத்திய அரசு தாங்குமா? எனவே, தடுப்பூசி வந்தவுடன், குறைந்தபட்சம் எத்தனை பேருக்கு போடுவது அவசியமானது என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் திட்டமிட வேண்டும். ஒரே நேரத்தில் 130 கோடி பேருக்கும் தடுப்பூசி போட்டுவிட முடியாது. அத்தனை தடுப்பூசிகளும் கிடைக்காது.

உச்சம் பெறும்

ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 8 கோடி முதல் 10 கோடி டோஸ்வரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், முதலில் தடுப்பூசி போட வேண்டிய 10 கோடி பேர் யார்? அதைத்தான் இப்போது முடிவு செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் உச்சம் பெற வாய்ப்புள்ளது. எப்படியும் டிசம்பர் மாத தொடக்கத்துக்குள் நாடு முழுவதும் உச்சம் பெற்றிருக்கும். 2-வது அலை பற்றி எதுவும் தெரியாது. அதுவும் கவலைக்குரிய அம்சம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story