சீன எல்லையை கண்காணிக்க சிறப்பு அம்சங்களுடன் வருகிறது பாரத் டிரோன்


சீன எல்லையை கண்காணிக்க சிறப்பு அம்சங்களுடன் வருகிறது பாரத் டிரோன்
x
தினத்தந்தி 21 July 2020 10:05 PM IST (Updated: 21 July 2020 10:05 PM IST)
t-max-icont-min-icon

சீன எல்லையை கண்காணிக்க உள்நாட்டிலேயே தயாரான பல சிறப்பு அம்சங்களை கொண்ட பாரத் டிரோன் இந்திய ராணுவத்துக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ந்தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இருநாட்டு எல்லையில் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன், எல்லை முழுவதும் போர் மேகமும் சூழ்ந்தது.

இதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி இரு நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருநாட்டு எல்லை பேச்சுவார்த்தையின் சிறப்பு பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசினர்.

இதில் எல்லையில் பதற்றத்தை தணிக்க சுமுக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை வாபஸ் பெறுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 6ந்தேதி காலை முதல் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேற தொடங்கின.

எனினும், கிழக்கு லடாக் பகுதியில் துல்லிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்டு உள்ளது.  இதற்காக சண்டிகரை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) ஆய்வகத்தில் பாரத் டிரோன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இவை உலகிலேயே மிக குறைந்த எடை கொண்டவை.  டி.ஆர்.டி.ஓ.வால் உள்நாட்டிலேயே உருவானவை.

சிறிய, சக்தி வாய்ந்த, எந்த இடத்திலும் அதிக துல்லியத்துடன் தன்னிச்சையாக செயல்படும் திறன் படைத்தவை.  நண்பர்கள் மற்றும் எதிரிகளை கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு உள்ளதுடன் அதற்கேற்ப நடவடிக்கையும் எடுக்கும்.

அதிக குளிர் மற்றும் கடும் வெப்பம் ஆகியவற்றிலும் செயல்படும் திறன் கொண்டது.  அடர்ந்த வனத்தில் ஒளிந்துள்ள மனிதர்களை கண்டறிய கூடியது.  இரவிலும் கண்டுணரும் நவீன திறன் மற்றும் ரேடாரால் கண்டறிய முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சங்களாகும்.

இந்த வகை டிரோன்கள் டி.ஆர்.டி.ஓ.வால் இந்திய ராணுவத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.  இதனால், இந்திய வீரர்கள் அதிக துல்லியமுடன் சீன எல்லை பகுதியை கண்காணிக்க முடியும்.  அந்நிய நாட்டு படைகளின் ஊடுருவல்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஏற்ற வகையில் டிரோன்கள் செயல்படும்.

Next Story