சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுடன் மருத்துவர்கள் நடனம்; வைரலாகும் வீடியோ


சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுடன் மருத்துவர்கள் நடனம்; வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 22 July 2020 5:33 PM IST (Updated: 22 July 2020 5:33 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து மருத்துவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி நாட்டிலேயே கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாநிலங்களில் 3வது இடத்தில் உள்ளது.  மராட்டியம் மற்றும் தமிழகம் முதல் இரு இடங்களில் உள்ளன.  இவற்றில் மராட்டியம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை கொண்டுள்ளன.

இதேபோன்று 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.  டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,324 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.25 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

டெல்லியில் இதுவரை 4ல் ஒரு பங்கு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோதிலும், இரட்டிப்படையும் விகிதம் 100 நாட்களாக உயர்ந்து உள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 80 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கு கொண்டுள்ள மருத்துவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட, எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் சேர்ந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அக்ஷர்தம் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையம் ஒன்றில் நோயாளிகளுடன் இணைந்து மருத்துவர்கள் நடனம் ஆடியுள்ளனர்.  இந்திய மற்றும் மேற்கத்திய நடன அசைவுகளை இணைத்து புதிய வகையில் அவர்கள் நடனம் ஆடி சுற்றியிருப்போரை ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.  இந்த வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

Next Story