அடுத்தடுத்து தற்கொலை: கொரோனா பெண் நோயாளிகள் சேலை, துப்பட்டா அணிய தடை
கொரோனா பெண் நோயாளிகள் சேலை, துப்பட்டா அணிய தடை விதித்து பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக மக்கள் அதிகளவில் வசித்து வரும் மாநில தலைநகரான பெங்களூருவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க ஒரு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதனால் பெங்களூரு உள்பட மாநிலத்தில் எங்கும் இனி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும், கொரோனா பரவலை தடுக்க சோதனைகளை அதிகரிப்பது, மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளிப்பது என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள கே.சி பொது மருத்துவமனையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள், நள்ளிரவில் கழிப்பறை சென்று சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்களால், பெண் நோயாளிகள் சேலை, துப்பட்டா அணிய தடை விதித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மாற்றாக பெண் நோயாளிகளுக்கு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது வழங்கப்படும் கவுன் போன்ற உடை வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரவில் நோயாளிகளுக்கு சிறிய அளவில் தூக்க மாத்திரை தரவும் பரிசீலனை நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் சார்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story