பீகாரில் வெள்ளத்திற்கு 7.65 லட்சம் பேர் பாதிப்பு


பீகாரில் வெள்ளத்திற்கு 7.65 லட்சம் பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2020 12:01 AM IST (Updated: 24 July 2020 12:01 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் வெள்ளத்திற்கு 7 லட்சத்து 65 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாட்னா,

பீகாரில் வருகிற அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கு தயாராகும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், கொரோனா பாதிப்புகளால் பீகார் (வால்மீகி நகர்) தொகுதிக்கான இடைத்தேர்தலை வருகிற செப்டம்பர் 7ந்தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.  பீகாரில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

நாட்டின் வடபகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனால், டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் நிலைமை வெகுவாக பாதிப்படைந்து உள்ளது.

பீகாரில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 7 லட்சத்து 65 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  பலர் தங்கள் வீடுகளையும், கால்நடைகளையும் இழந்துள்ளனர்.  அவர்களில் 13 ஆயிரத்து 877 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படை ஆகியவற்றின் 21 குழுக்கள் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

எனினும், சில பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன.  இதனால் பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு உள்ளூர்வாசிகள் சென்றுள்ளனர்.  இதுபற்றி பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறும்பொழுது, எங்களுடைய பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.  அதனால் நாங்கள் இங்கேயே இருக்க வேண்டியுள்ளது.  எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை.  அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் யாரும் வரவில்லை என வருத்தத்துடன் கூறினார்.

Next Story