மிகவும் குறைவான விலையில் கொரோனா பரிசோதனைக்கு நவீன கருவியை உருவாக்கிய கரக்பூர் ஐ.ஐ.டி


மிகவும் குறைவான விலையில் கொரோனா பரிசோதனைக்கு நவீன கருவியை உருவாக்கிய கரக்பூர் ஐ.ஐ.டி
x
தினத்தந்தி 25 July 2020 10:29 PM GMT (Updated: 25 July 2020 10:29 PM GMT)

கொரோனா பரிசோதனைக்கு நவீன கருவி ஒன்றை கரக்பூர் ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது. இந்த கருவி மூலம் ரூ.400-க்கும் குறைவான கட்டணத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.

கரக்பூர், 

மிகவும் குறைவான விலையில் வேகமான கொரோனா பரிசோதனைக்கு நவீன கருவி ஒன்றை கரக்பூர் ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது. இந்த கருவி மூலம் ரூ.400-க்கும் குறைவான கட்டணத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.

உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை முறைகளை அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் இரவு, பகலாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் பரிசோதனை வழிகளை இன்னும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி கொரோனா தொற்றுக்கு ஆகும் செலவும் (தனியார் ஆய்வகங்களில்) ஆயிரக்கணக்கில் எகிறுகிறது. எனவே மலிவான மற்றும் வேகமான பரிசோதனைக்காக புதிய கருவிகளை உருவாக்குமாறு நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் சுமன் சக்கரவர்த்தி மற்றும் உயிரி அறிவியல் துறை பேராசிரியர் அரிந்தம் மண்டல் ஆகியோரின் வழிகாட்டுதலில், மாணவர்கள் சிலர் இணைந்து கொரோனா பரிசோதனைக்காக நவீன கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

தனித்துவம் மிக்க இந்த சிறிய கையடக்க கருவியால் வேகமாகவும், துல்லியமாகவும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள முடிகிறது. இதற்கு என ஆய்வகங்களோ, ஆர்.டி-பி.சி.ஆர் போன்ற எந்திரங்களோ தேவையில்லை.

இதைப்போல வெறும் காகித துண்டுகளை மாற்றி மாற்றியே இந்த கருவி மூலம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மிகவும் மலிவான விலையில் மேற்கொள்ள முடியும். அந்தவகையில் ஒருவருக்கு ரூ.400-க்கும் குறைவான கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். இது அடித்தட்டு மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகளைப்போல மிகவும் துல்லியமான முடிவுகளை இந்த கருவி வழங்குகிறது. இந்த கருவி மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த கருவியின் பரிசோதனை நடவடிக்கைகளை ஆய்வாளர் குழுவினர் துல்லியமாக மதிப்பிட்டு உள்ளனர். அந்தவகையில் ஒரு மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளை வழங்கி விடுகிறது.

இந்த கையடக்க கருவியில் ஒரு சிறிய தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாட்டு அலகு, மரபணு பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு கண்டறிதல் அலகு, அறிமுகம் மற்றும் பரப்புவதற்கான தனிப்பயனாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு போன்றவை அடங்கி உள்ளன. இதன் மூலம் ஒரு விலையுயர்ந்த பி.சி.ஆர் எந்திரத்தின் தேவையை இது நீக்குகிறது.

இந்த கருவிகளை கணிசமான எண்ணிக்கையில் உருவாக்க கரக்பூர் ஐ.ஐ.டி.யால் முடியும் எனவும், எனினும் காப்புரிமை உரிமம் கிடைத்தால் இதுபோன்ற கருவிகளை வர்த்தக நோக்கத்தில் தயாரிக்க முடியும் என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story