கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 11:49 PM GMT (Updated: 31 Aug 2020 11:49 PM GMT)

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு சுப்ரீம் கோர்ட்டு 1 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த அபராதத்தை பிரசாந்த் பூஷண் 15-ந் தேதிக்குள் செலுத்த தவறினால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகளுக்கு வழக்குகளில் ஆஜராக தடை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும், மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் என கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்த போது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் பிரசாந்த் பூஷண் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் அவர் மன்னிப்பு கோருவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ஆஜராகி, “பிரசாந்த் பூஷண் கருத்துகள் ஒருவேளை அவதூறாக இருக்கும் பட்சத்தில் அவரை எச்சரித்து விட வேண்டுமே தவிர அவருக்கு தண்டனை எதையும் வழங்கக்கூடாது. அவரை கோர்ட்டு மன்னிக்க வேண்டும். இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு கருணையுடன் அணுக வேண்டும். அவ்வாறு செய்தால் சுப்ரீம் கோர்ட்டின் நன்மதிப்பு பலமடங்கு உயரும்” என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, “பிரசாந்த் பூஷண் தன்னுடைய தவறை உணர்ந்ததாக தெரியவில்லை. அவர் மன்னிப்பு கடிதம் எதையும் கொடுக்கவும் இல்லை. அவருடைய கூடுதல் மனுவிலும் மன்னிப்பு கோர மாட்டேன் என்று கூறியிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த வேணுகோபால், அவருடைய கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் காலம் இன்னும் கடந்து விடவில்லை என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி அருண் மிஸ்ரா, பிரசாந்த் பூஷணுக்கு மேலும் 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கினார். ஆனால், 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடியபோதும் பிரசாந்த் பூஷண், தன்னுடைய கருத்தில் தான் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும், மன்னிப்பு கோரப்போவது இல்லை என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு கோருவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. வருத்தம் தெரிவிக்குமாறு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். தன்னுடைய அறிக்கைக்கு ஊடகங்களில் வெகுவாக விளம்பரம் கொடுத்தார். இது குறித்து பேட்டிகளும் அளித்தார்.

இது கோர்ட்டின் மாண்பை மேலும் சீர்குலைப்பதாக அமைந்தது. எனவே, அவருக்கு ரூ.1 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை அவர் வருகிற 15-ந் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால், அவர் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு அவர் கோர்ட்டில் வழக்குகளில் ஆஜராக தடை விதிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Next Story