லடாக் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது


லடாக் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது
x
தினத்தந்தி 1 Sept 2020 5:22 AM IST (Updated: 1 Sept 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

லடாக் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

புதுடெல்லி,

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அத்துமீற முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது ஏற்பட்ட மோதலில் சீன தரப்பில் 35 பேர் பலி ஆனார்கள். இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, எல்லையில் பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியிலும், ராணுவ மட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது, முன்பு இருந்த நிலைக்கு படைகளை வாபஸ் பெற சீனா ஒப்புக்கொண்டதை தொடர்ந்து எல்லையில் ஓரளவு பதற்றம் தணிந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் பங்கோங் சோ ஏரியின் வட கரை பகுதியில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏரியின் தென்கரை பகுதியில் கடந்த 29-ந்தேதி இரவு சீன வீரர்கள் திடீரென்று அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டனர். ஏற்கனவே உள்ள நிலைப்பாட்டை மீறும் வகையில் அவர்கள் அத்துமீற முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.

இந்த தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார். ராணுவ மற்றும் தூதரக மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட கருத்தொற்றுமைக்கு விரோதமாக சீன வீரர்கள் நடந்து கொண்டதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சீன வீரர்கள் புதிதாக மேற்கொண்ட அத்துமீறல் முயற்சிக்கு தீர்வு காணும் வகையில் சுஷூல் என்ற இடத்தில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் இந்திய ராணுவம் உறுதியாக இருந்த போதிலும், இந்திய நிலைகளை வலுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதில் அமன் ஆனந்த் கூறி உள்ளார்.

லடாக் பகுதியில் ஜூன் 15-ந்தேதிக்கு பிறகு நடந்த முக்கிய சம்பவமாக இது கருதப்படுகிறது.

Next Story