இந்தியாவில் 8 நாட்களில் 5 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் புதிதாக 78,512 பேருக்கு தொற்று


இந்தியாவில் 8 நாட்களில் 5 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் புதிதாக 78,512 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 1 Sept 2020 5:34 AM IST (Updated: 1 Sept 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 78 ஆயிரத்து 512 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அரசும், மக்களும் தவித்து வரும் நிலையில், புதிதாக தொற்றில் சிக்குவோரின் எண்ணிக்கையோ தொடர்ந்து எகிறுகிறது. மேலும் தினந்தோறும் ஆயிரத்தை தொடும் சாவு எண்ணிக்கையையும் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 78 ஆயிரத்து 512 பேர் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதில் சுமார் 70 சதவீத நோயாளிகளை மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 7 மாநிலங்கள் கொண்டிருக்கின்றன.

இந்த புதிய நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 21 ஆயிரத்து 245 ஆக அதிகரித்து உள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையிலும் 43 சதவீதத்தினரை மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டிருக்கின்றன. 11.66 சதவீத நோயாளிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் மேலும் 971 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதிலும் பாதிக்கு மேற்பட்டவர்கள் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது சோகத்தை அளித்திருக்கிறது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது.

971 பலி எண்ணிக்கையில் மராட்டியத்தில் மட்டுமே 296 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக கர்நாடகாவில் 106 பேரும், ஆந்திராவில் 88 பேரும், உத்தரபிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் முறையே 67 பேர், 56 பேர், 50 பேர் என கணிசமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதைத்தவிர மத்திய பிரதேசத்தில் 29 பேர், டெல்லி 22, குஜராத், பீகாரில் தலா 17, ஜார்கண்ட், ராஜஸ்தானில் தலா 13, அரியானா, ஒடிசாவில் தலா 12, புதுச்சேரி 10, காஷ்மீர், தெலுங்கானாவில் தலா 9, அசாம், சண்டிகர், சத்தீஷ்கார், உத்தரகாண்டில் தலா 7, கோவா, திரிபுராவில் தலா 5, அருணாசல பிரதேசம், லடாக்கில் தலா 2, அந்தமான், இமாசல பிரதேசத்தில் தலா 1 என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பலி ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் இவ்வாறு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இருக்க, தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ஆறுதலை அளித்து வருகிறது. நேற்று காலை வரையிலானநிலவரப்படி 27 லட்சத்து 74 ஆயிரத்து 801 பேர் கொரோனாவை வென்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இது 76.62 சதவீதம் ஆகும்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் கடைசி 5 லட்சம் பேர், கடந்த 8 நாட்களில் மட்டும் குணமடைந்தவர்கள் ஆவர். தற்போதைய நிலையில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 975 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைப்போல சாவு விகிதமும் 1.78 ஆக குறைந்திருக்கிறது. இவை அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் நிம்மதியையும், ஆறுதலையும் அளித்து இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க கொரோனாவுக்கு எதிரான பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 278 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.23 கோடியாக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்து உள்ளது. அவை ஆதாரமற்ற செய்திகள் எனக்கூறியுள்ள அரசு, கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் கொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும் பலி எண்ணிக்கைகளை குறைப்பதற்காக தீவிர பரிசோதனை, சிறந்த சிகிச்சை மற்றும் தீவிர கண்காணிப்பு வசதிகளை மேற்கொள்ளுமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு அதிக பலி எண்ணிக்கையை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முன்னணியில் இருந்தன. இதில் அமெரிக்காவில் 1.87 லட்சம் உயிரிழப்புகளும், பிரேசிலில் 1.20 லட்சம் மரணங்களும் நிகழ்ந்திருந்தன. மெக்சிகோவும், இந்தியாவும் தலா 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரணங்களுடன் முறையே 3 மற்றும் 4-ம் இடங்களை பெற்றிருந்தன.

இந்த நிலையில் இந்தியாவில் மேலும் 971 பேர் பலியானதை தொடர்ந்து மொத்த சாவு எண்ணிக்கை 64 ஆயிரத்து 469 ஆனது. அதேநேரம் மெக்சிகோவின் மொத்த எண்ணிக்கை நேற்று 64 ஆயிரத்து 158 ஆக உயர்ந்தது. இதன் மூலம் மெக்சிகோவை முந்திஇந்தியா 3-வது இடத்தை பிடித்து மோசமான சாதனைக்கு சொந்தமாகி இருக்கிறது.


Next Story