3 பிரதமர்களிடம் மந்திரியாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி வாழ்க்கை குறிப்பு
மறைந்த பிரணாப் முகர்ஜி 3 பிரதமர்களிடம் பல்வேறு இலாகாக்களில் மந்திரியாக பணியாற்றி இருக்கிறார்.
மறைந்த பிரணாப் முகர்ஜி 3 பிரதமர்களிடம் பல்வேறு இலாகாக்களில் மந்திரியாக பணியாற்றி இருக்கிறார்.
அவரது வாழ்க்கை குறிப்பு வருமாறு:-
84 வயதான பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். ஜனாதிபதி ஆகும் முன்பு பல்வேறு காலகட்டங்களில் மத்திய மந்திரிசபையில் வெளியுறவு, ராணுவம், நிதி, வர்த்தகம் ஆகிய இலாகாக்களுக்கு மந்திரியாக இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1982-ம் ஆண்டில் 47-வது வயதிலேயே இவர் நிதி மந்திரி ஆனார்.
3 பிரதமர்களிடம் மந்திரி
இந்திராகாந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய மூன்று பிரதமர்களிடம் மந்தியாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 5 முறையும், மக்களவை உறுப்பினராக 2 முறையும் இருந்திருக்கிறார். முதன் முதலாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக மேற்கு வங்காள மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியில் இருந்து கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிராடி கிராமத்தில் கடந்த 1935-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவருடைய தந்தை பெயர் கமடா கிங்கர் முகர்ஜி, தயார் பெயர் ராஜலட்சுமி முகர்ஜி. பெற்றோர் சுதந்திர போராட்ட வீரர்கள் ஆவார்கள். காங்கிரஸ் தலைவராக இருந்த இவருடைய தந்தை விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்று உள்ளார்.
பிரணாப் முகர்ஜி அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையை கொண்டவர். காங்கிரஸ் கட்சியிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர் சிறந்த பேச்சாளரும் ஆவார்.
1969-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் உதவியுடன் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, 1973-ம் ஆண்டில் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றார். 1980 முதல் 1985-ம் ஆண்டு வரை மாநிலங்களவை தலைவராகவும் பதவி வகித்தார்.
இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அந்த சமயத்தில் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காங்கிரசில் ஓரங்கட்டப்பட்டதால், அதில் இருந்து விலகிய பிரணாப் முகர்ஜி ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தியுடன் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, 1989-ம் ஆண்டு அந்த கட்சியை காங்கிரசுடன் இணைத்தார்.
1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் பிரதமரான நரசிம்மராவ் திட்டக்கமிஷன் தலைவராக பிரணாப் முகர்ஜியை நியமித்தார். அதன்பிறகு 1995-ல் வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ராணுவம், வெளியுறவு, நிதி இலாகாக்களில் மந்திரி பதவி வகித்து உள்ளார்.
2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மாவை தோற்கடித்தார். பிரணாப் முகர்ஜிக்கு 70 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2017-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் இருந்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த போது தனக்கு வந்த 34 கருணை மனுக்களில் 30 மனுக்களை நிராகரித்து உள்ளார்.
பிரணாப் முகர்ஜிக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சூழ்நிலைகளின் காரணமாக அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது. என்றாலும் ஜனாதிபதியாகி நாட்டின் முதல் குடிமகன் என்ற மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரணாப் முகர்ஜி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். நீண்ட காலம் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்று பேசிய அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பிரணாப் முகர்ஜி அதை பெரிதுபடுத்தவில்லை.
2012-ம் ஆண்டு ஜனாதிபதி ஆகும் வரை 23 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பிரச்சினைகளை மதிநுட்பத்துடன் அணுகியும், சாதுரியமாக பேசியும் தீர்த்து வைப்பதிலும் பிரணாப் முகர்ஜி வல்லவர். இதனால் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் பிரச்சினைகளை ஏற்படும் போது அவற்றை தீர்த்து வைப்பதற்காக கட்சி மேலிடம் இவரைத்தான் அங்கு அனுப்பி வைக்கும்.
பிரணாப் முகர்ஜி டெல்லியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த போதும், அடிக்கடி தனது சொந்த கிராமத்துக்கு செல்வார். சொந்த கிராமத்துக்கு சென்று துர்கா பூஜையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
வரலாறு மற்றும் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பட்டமும், சட்டப்படிப்பும் படித்துள்ள பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் உடல்நிலை காரணமாகவும், வயது மூப்பின் காரணமாகவும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த ஆண்டு மத்திய அரசு இவருக்கு மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்தது. முன்னதாக 2008-ம் ஆண்டில் மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. இவை தவிர மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் மனைவி பெயர் சுவ்ரா முகர்ஜி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர்களுக்கு இந்திரஜித் முகர்ஜி, அபிஜித் முகர்ஜி என்ற இரு மகன்களும், ஷர்மிஸ்தா முகர்ஜி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் அபிஜித் முகர்ஜி ஜாங்கிபூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். ஷர்மிஸ்தா முகர்ஜி கதக் நடன கலைஞர் ஆவார். இவரும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.
பிரணாப் முகர்ஜியின் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது
பிரணாப் முகர்ஜியின் சொந்த ஊர், மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட மிராட்டி ஆகும். கொல்கத்தாவில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமம் நேற்று முதல் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளது. கிராமத்தினர் அனைவரும் பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்கு அலையலையாக வந்து தங்கள் கண்ணீரை பகிர்ந்து செல்கின்றனர்.
நாட்டின் ஜனாதிபதி அளவுக்கு பிரணாப் முகர்ஜி உயர்ந்தாலும், தனது கிராமத்தினரிடம் எப்போதும் மிகவும் எளிமையாக இருப்பார். வெகு இயல்பாகவே பழகக்கூடியவர். குறிப்பாக குழந்தைகளை மிகவும் நேசிப்பார். அவரை பிரணாப் டா, பிரணாப் காகு அல்லது ஜெத்து (மாமா) என்றுதான் கிராமத்தினர் அழைப்பர்.
மேற்கு வங்காளத்தின் விமரிசையாக கொண்டாடப்படும் துர்கா பூஜையை ஆண்டுதோறும் தனது வீட்டில் அவர் சிறப்பாக கொண்டாடுவார். இதில் 5 நாட்களும் கிராமத்தினர் அனைவரும் அவரது வீட்டிலேயே விழாவை கொண்டாடுவார்கள். அவர்களுக்கு சிறப்பு விருந்து கொடுத்து உபசரிப்பார்.
டெல்லியில் இருந்தாலும் 2 மாதங்களுக்கு முன்னரே தனது கிராமத்தினரை அழைத்து பூஜைக்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்ய கூறுவார். இனி அதுபோன்ற ஒரு கொண்டாட்டம் தங்களுக்கு கிடைக்காது என கிராமத்தினர் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
தனது மிகவும் புகழ்பெற்ற மகனை இழந்த மிராட்டி கிராமம் களையிழந்து காணப்படுகிறது.
Related Tags :
Next Story