தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 2 Sept 2020 12:52 AM IST (Updated: 2 Sept 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு (தொலைத்தொடர்பு துறைக்கு) உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளன.

அந்த பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்று செயல்படுத்தவில்லை.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வோடாபோன், ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றின் பாக்கித் தொகையை (ஏ.ஜி.ஆர்.) செலுத்துவதற்கு 10 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் ஏ.ஜி,ஆர் நிலுவைத்தொகையின் 10 சதவீதத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் கட்ட வேண்டும்.

பின்னர் 2031-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி விட வேண்டும்.

நிலுவை தொகையின் தவணையை செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதம், வட்டி செலுத்தவும், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்கவும் நேரிடும்.

இவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story