நாடு முழுவதும் ஆகஸ்டு மாதத்தில் 27 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வுத்துறை தகவல்
நாடு முழுவதும் ஆகஸ்டு மாதத்தில் 27 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை மழைக்காலமாக கணக்கிடப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் பெய்யும் மழை அளவை இந்திய வானிலைத்துறை கணக்கிட்டு அறிவித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்கமான அளவை விட 27 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது கடந்த 44 ஆண்டுகளில் அதிகம் ஆகும். அதேநேரம் கடந்த 120 ஆண்டுகளில் இது 4-வது அதிக மழைப்பொழிவு ஆகும். அந்தவகையில் கடந்த 1926-ம் ஆண்டு 33 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. அடுத்ததாக 1976-ல் 28.4 சதவீதமும், 1973-ல் 27.8 சதவீதமும் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது.
கடந்த மாதம் வங்காள விரிகுடா கடலில் 5 முறை குறைந்த காற்றழுத்தம் உருவானதே இந்த அதிக மழைப்பொழிவுக்கு காரணம் என வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதைப்போல கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31 வரையிலான காலகட்டத்திலும் வழக்கமான அளவை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்திருப்பதாகவும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story