ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை ஆந்திர அரசு அதிரடி


ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை ஆந்திர அரசு அதிரடி
x
தினத்தந்தி 4 Sept 2020 8:54 AM IST (Updated: 4 Sept 2020 8:54 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு அதிரடி தடை விதித்து உள்ளது.

அமராவதி,

ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு அதிரடி தடை விதித்து உள்ளது.

முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்த மாநில மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி வெங்கடராமையா தெரிவிக்கையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதுடன், அவர்களது வாழ்க்கையை பாழ்படுத்தி விடுகிறது. எனவே இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதை மீறும் ஆன்லைன் சூதாட்ட அமைப்பாளர்களுக்கு முதல் தடவை ஒரு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.

Next Story