இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 Sept 2020 10:25 AM IST (Updated: 4 Sept 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கணடறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை தனது மாயவலையில் வீழ்த்தி வரும் கொரோனா வைரஸ், அதில் லட்சக்கணக்கானோரின் உயிரை குடித்து தொடர்ந்து வெறியாட்டம் போட்டு வருகிறது. ஏழை-பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் அவதிக்குள்ளாக்கி வரும் கொரோனாவின் கொட்டத்தை அடக்க முடியாமல் உலக மக்களினம் திகைத்து வருகிறது.

இப்படி உலகமே கொரோனாவிடம் சரணடைந்துள்ள நிலையில், இந்தியாவும் அந்த வைரசின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறி வருகிறது. இங்கும் நாள்தோறும் சில பத்தாயிரம் எண்ணிக்கையிலான மக்களை தனது கொடூர கரங்களால் வளைத்து வருகிறது, கொரோனா. அத்துடன் ஏராளமான மரணங்களையும் தினந்தோறும் நிகழ்த்தி வருகிறது.

அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 1.096 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67,376லிருந்து 68,472 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.75% குணமடைந்தோர் விகிதம் 77.09% ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 66,659 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.70 லட்சத்தில் இருந்து 30.37 லட்சமானது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38,53,406ல் இருந்து 39,36,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 8.31 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.69 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4.66 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story