உலக அளவில் கொரோனா பாதிப்பு வரிசையில் 2வது இடம் நோக்கி முன்னேறும் இந்தியா


உலக அளவில் கொரோனா பாதிப்பு வரிசையில் 2வது இடம் நோக்கி முன்னேறும் இந்தியா
x
தினத்தந்தி 4 Sept 2020 5:34 PM IST (Updated: 4 Sept 2020 5:34 PM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் கொரோனா பாதிப்பு நாடுகளின் வரிசையில் இந்தியா 2வது இடத்தினை நோக்கி நெருங்கி சென்றுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் புதிய உச்சம் அடைந்து வருகின்றன.  நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 20 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது, அதற்கு முன்புவரை பதிவாகி இருந்த பாதிப்பு எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.  இவற்றில், சென்னை, மும்பை, புனே மற்றும் புதுடெல்லி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்கள் ஆகும்.

இவை தவிர உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பிற மாநிலங்களின் கிராமப்புற பகுதிகளிலும் பாதிப்புகள் அதிகரித்து புதிய கொரோனா மண்டலங்கள் உருவாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வரிசையில் 61 லட்சம் பேருடன் அமெரிக்கா முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதனை தொடர்ந்து 2வது இடம் பிடித்துள்ள பிரேசிலில் 40 லட்சம் பேர் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38,53,406ல் இருந்து 39,36,747 ஆக உயர்ந்துள்ளது.

140 கோடி அளவிலான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில், பரிசோதனை எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.  பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 லட்சம் என்ற அளவை கடந்துள்ளதுடன், பிரேசிலின் எண்ணிக்கைக்கு சற்று குறைவாக உள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு வரிசையில் இந்தியா 2வது இடத்தினை நோக்கி நெருங்கி சென்றுள்ளது.

Next Story