முந்தைய தளர்வுகளை விட மத்திய அரசுக்கு சவாலாக திகழும் 4-ம் கட்ட தளர்வுகள்


முந்தைய தளர்வுகளை விட மத்திய அரசுக்கு சவாலாக திகழும் 4-ம் கட்ட தளர்வுகள்
x
தினத்தந்தி 5 Sept 2020 10:12 AM IST (Updated: 5 Sept 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

தற்போதைய 4-ம் கட்ட தளர்வுகள், முந்தைய தளர்வுகளை விட மத்திய அரசுக்கு மிகுந்த சவாலாக திகழும் என்று தெரிகிறது.

புதுடெல்லி,

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மாதம் 1-ந் தேதியில் இருந்து 4-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

இவை முந்தைய தளர்வுகளை விட மத்திய அரசுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குதல், நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துதல், அரசியல், மத, சமூக கூட்டங்களுக்கு அனுமதி அளித்தல் ஆகிய 3 முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டி உள்ளது.

முதலில், வருகிற 7-ந் தேதி டெல்லி மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரம் கழித்து (14-ந் தேதி) நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. அதற்கடுத்த ஒரு வாரம் கழித்து (21-ந் தேதி), அரசியல், மத, சமூக கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எனவே, ஒவ்வொரு வாரமும் மத்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டி உள்ளது. மெட்ரோ ரெயில் சேவையை பொறுத்தவரை, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் மக்களுக்கு பயண வசதியை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டி உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தையும் சமூக இடைவெளியுடன் நடத்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்த வேண்டி உள்ளது.

அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிப்பது, நவம்பர் மாதம் நடக்க உள்ள பீகார் சட்டசபை தேர்தலுக்கு உதவும். அதையும் சமூக இடைவெளியுடன் நடத்தி, வாக்காளர்களை திருப்திப்படுத்த வேண்டி உள்ளது.

எனவே, 4-ம் கட்ட தளர்வுகள், மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், நாடாளுமன்ற கேள்வி நேரம் குறைக்கப்பட்டதை அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் நேரத்தை குறைப்பது, அரசை கேள்வி கேட்கும் வாய்ப்பை பறித்து விடும்.

இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்கள் கூட கொரோனா சமயத்தில் கேள்வி நேரத்துடன் நடந்துள்ளன. இந்தியாவில், சத்தீஷ்கார், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டசபைகளும் கேள்வி நேரத்துடன் நடந்துள்ளன.

எனவே, இதுபோன்ற விதிவிலக்கான சமயங்களில், நாடாளுமன்றத்தை எப்படி முழுமையாக இயங்கச்செய்வது என்று அரசும், எதிர்க்கட்சிகளும் இணைந்து முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story