“லடாக் எல்லையில் மோதல் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்” - சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் வற்புறுத்தல்


“லடாக் எல்லையில் மோதல் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்” - சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 6 Sept 2020 5:45 AM IST (Updated: 6 Sept 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் மோதல் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுமாறு சீன மந்திரியிடம் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வற்புறுத்தினார்.

புதுடெல்லி,

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மே மாதம் ஊடுருவியதில் இருந்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. இதில் ஜூன் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.

இதனால் இந்திய-சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவும், அங்கிருந்து படைகளை வாபஸ் பெறுவதற்காகவும் இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே கடந்த 29-ந் தேதி பங்கோங்சோ ஏரி பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவ முயன்றது. இதை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

இந்த சம்பவத்துக்கு பின் எல்லையில் போர் மேகம் சூழ்ந்து உள்ளது. அங்கு சர்ச்சைக்குரிய பகுதிகளில் வீரர்களை நிறுத்தி உள்ள இந்தியா, ஏராளமான படைகளையும், ஆயுதங்களையும் எல்லையில் குவித்து வருகிறது. இதைப்போல சீனாவும் பின்வாங்க மறுப்பதால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகளுக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் சீன, ரஷிய ராணுவ மந்திரிகளுடன், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து சீன ராணுவ மந்திரி வெய் பெங்கேவை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். சீன மந்திரியின் வேண்டுகோளின்படி நடந்த இந்த கூட்டம் 2 மணி 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த கூட்டத்தில் லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இருநாட்டு மந்திரிகளும் வெளிப்படையாகவும், ஆழமாகவும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின்போது சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

எல்லையில் அதிக எண்ணிக்கையில் படைகளை குவித்தல், ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் மற்றும் அங்கு நிலவி வந்த இயல்பு நிலையை தன்னிச்சையாக மாற்ற முயற்சித்தல் உள்ளிட்ட சீன படைகளின் நடவடிக்கைகள் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிரானவை. உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை சீனா கண்டிப்பாக மதிக்க வேண்டும்.

அங்கு நீடித்து வரும் இயல்பு நிலையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள சூழலை பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும். இரு தரப்பும் அங்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது மேலும் பிரச்சினையை சிக்கலாக்குவதுடன், எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்து விடும்.

எல்லையில் மிக விரைவில் பதற்றத்தை தணிப்பது மற்றும் படைகளை முழுவதுமாக விலக்குவது தொடர்பாக, ராணுவம் மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தொடர வேண்டும். இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவின்படி இருதரப்பும் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

லடாக் எல்லையில் பங்கோங்சோ ஏரி உள்ளிட்ட மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து விரைவில் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவுடன் சீனா ஒத்துழைக்க வேண்டும்.

எல்லை மேலாண்மையில் இந்திய படைகள் எப்போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கின்றன. அதேநேரம் இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் சீன ராணுவ மந்திரி வெய் பெங்கே பேசும்போது, எல்லை விவகாரத்தில் மோடி-ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகளை இருதரப்பும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய நிலவரம் மற்றும் நீண்டகால பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியாக தீர்க்க வேண்டும் என்றும், இதற்காக இரு தரப்பும் அனைத்து மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த தகவல்களை மத்திய அரசு அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்து உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு மந்திரிகள் நேரடியாக சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.

Next Story