போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி குற்றவாளியாக சேர்ப்பு - 12 பேர் மீது வழக்குப்பதிவு


போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி குற்றவாளியாக சேர்ப்பு - 12 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 Sept 2020 4:15 AM IST (Updated: 6 Sept 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி, 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும், நடிகர், நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வீரேன் கண்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்திய விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த தகவல்களின் பேரில் நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் முதல் குற்றவாளியாக சிவபிரகாஷ் பெயரும், 2-வது குற்றவாளியாக நடிகை ராகிணி திவேதியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. நடிகை ராகிணி திவேதி உள்பட கைதான 12 பேர் மீதும் என்.டி.பி.எஸ். சட்டப்பிரிவு 21, 21 சி, 27 ஏ, மற்றும் இந்திய சட்டப்பிரிவு 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 7 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கூடிய விரைவில் போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story