நடிகை ரியாவிடம் 2-வது நாளாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தீவிர விசாரணை


நடிகை ரியாவிடம் 2-வது நாளாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தீவிர  விசாரணை
x
தினத்தந்தி 7 Sept 2020 11:41 AM IST (Updated: 7 Sept 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரியாவிடம் நேற்று அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 இந்த வழக்கு விசாரணையின் போது நடிகை ரியா, அவரது சகோதரர் மற்றும் சிலருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில் சமீபத்தில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த அப்பாஸ் லாகானி, கரன் அரோரா, சாயித் விலாத்ரா, அபதில் பாசித் பாரிகர் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது. அப்போது நடிகர் சுஷாந்த் சிங்கின் உதவியாளர் சாமுவேல் மிரண்டா (வயது 33) என்பவருக்கும் கைது செய்யப்பட்ட போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையின் போது சாமுவேல் மிரண்டா, ரியா சக்கரபோர்த்தியின் தம்பி சோவிக் (24) தான் போதைப்பொருள் கும்பலை தொடர்பு கொள்ள கூறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு  காவலில் எடுத்து விசாரித்து  வருகிறது. இந்தநிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்  நடிகை ரியாவிடம் 6 மணி தீவிர விசாரணை மேற்கொண்டனர். 2-வது நாளாக இன்றும் ரியாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. 


Next Story