அடுத்த ஆண்டு முற்பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என தகவல்


அடுத்த ஆண்டு முற்பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2020 7:08 PM IST (Updated: 7 Sept 2020 7:08 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டின் முற்பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிவதற்கு ரூ.1,000 கோடி செலவில் சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தினை செயல்படுத்தியது.

சந்திரயான்-2 விண்கலம், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ந்தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

எனினும், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 7ந்தேதி, நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பு இழக்கப்பட்டது.  தொடர்ந்து பல நாட்கள் முயற்சித்தும் இஸ்ரோவால் அதனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனை தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலம் ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.  இந்த முறை விண்கலம் வெற்றியுடன் நிலவில் இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன்-2 விண்கலம் போன்றே வடிவமைக்கப்படும் இந்த விண்கலத்தில் லேண்டர் மற்றும் ரோவர் இருக்கும்.  ஆனால் ஆர்பிட்டர் இடம்பெறாது.  நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்புகளால் ஊரடங்கு விதிப்பதில் அவசியம் ஏற்பட்டது.  இதனால் சந்திரயான்-3 விண்கல திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து வரும் 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட கூடும் என விண்வெளி துறைக்கான மத்திய இணை மந்திரி ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.  இந்த குறிப்பிட்ட திட்டம் நிறைவேறும் நிலையில், நிலவில் வெற்றிகரம் ஆக விண்கலம் தரையிறங்க செய்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

இதேபோன்று இந்தியாவின் முதல்முறையாக மனிதர்களை விண்ணில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன.  வரும் 2022ம் ஆண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

Next Story