நடிகை கங்கனா பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களை சுமந்து கொண்டு வருகிறார்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களை சுமந்து கொண்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும் பாலிவுட்டில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு, மும்பை அல்லது மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்து உள்ளார். இந்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மும்பை நகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதுபற்றி காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பு அதிகாரி ரன்தீப் சுர்ஜீவாலா கூறும்பொழுது, இது உண்மையில்லை. எந்த மனிதராலும் இதனை ஏற்று கொள்ள முடியாது.
மோடிஜி மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களை சுமந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட திரைப்பட நடிகை வருகிறபோதிலும், அவருக்கு போதிய பாதுகாப்பினை நாங்கள் வழங்குவோம்.
எனினும், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியது சரியல்ல. இது அரசியல் சந்தர்ப்பவாதம். பா.ஜ.க.வினரால் திரைப்பட நடிகைகளை கொண்டு, அரசியல் உள்நோக்கம் கொண்ட இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இதனை நாங்கள் ஏற்க மறுக்கிறோம் என கூறினார்.
அவர் தொடர்ந்து திரைப்பட நடிகை ஒருவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. இதனால், பா.ஜ.க.வின் சார்பிலான அவர், மராட்டியத்தின் புகழை கெடுக்கும் வகையில் இன்னும் வெளிப்படையாக பேச முடியும். மராட்டியத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை விமர்சிக்க முடியும் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
Related Tags :
Next Story