நடிகை கங்கனாவின் பேச்சை பா.ஜ.க. ஆதரிக்கவில்லை; காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்
நடிகை கங்கனாவின் பேச்சுக்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவிக்கவில்லை என முன்னாள் முதல் மந்திரி பட்னாவிஸ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் மன உளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டார் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும் பாலிவுட்டில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு, மும்பை அல்லது மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்து உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பு அதிகாரி ரன்தீப் சுர்ஜீவாலா கூறும்பொழுது, மோடிஜி மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களை சுமந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட திரைப்பட நடிகை வருகிறார். என்றபோதிலும், அவருக்கு போதிய பாதுகாப்பினை நாங்கள் வழங்குவோம்.
அவரது இந்த பேச்சு அரசியல் சந்தர்ப்பவாதம் நிறைந்தது. பா.ஜ.க.வினரால் திரைப்பட நடிகைகளை கொண்டு, அரசியல் உள்நோக்கம் கொண்ட இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இதனால், மராட்டியத்தின் புகழை கெடுக்கும் வகையில் அவர் இன்னும் வெளிப்படையாக பேச முடியும். மராட்டியத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை விமர்சிக்க முடியும் என குற்றச்சாட்டாக கூறினார்.
நடிகை கங்கனாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி பா.ஜ.க.வை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்பொழுது, நடிகை கங்கனா ரனாவத் பேசியிருப்பது தவறு. ஆனால், சட்டத்தின்படி அவரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
நாட்டில் பயங்கரவாதிகளுக்கு கூட அவர்கள் தாக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ரனாவத் ஒரு கலைஞர். தனிநபர் ஒருவரின் வாழ்வை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. கங்கனா பேசியதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒருவரும் அதனை ஆதரிக்கமாட்டார்கள். என்றாலும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story