நாடு முழுவதும் மேலும் 90 ஆயிரம் பேருக்கு தொற்று


நாடு முழுவதும் மேலும் 90 ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 Sept 2020 4:15 AM IST (Updated: 8 Sept 2020 3:00 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், ஆந்திராவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி, 

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றி அகில உலகையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், தனது கொடூர கரங்களை தொடர்ந்து பரப்பி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மனிதர்களை எல்லாம் மிரட்டி வருகிறது.

பெரிய, சிறிய நாடு என்ற பேதமில்லாமலும், ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு இன்றியும் அனைத்து தரப்பினரையும் பாதித்து வரும் இந்த பெருந்தொற்றுக்கு தினமும் ஏராளமான மனித உயிர்கள் செத்து மடிகின்றன. இப்படி இரக்கமே இல்லாமல் மனிதர்களை கொன்றொழித்து வரும் இந்த வைரசை கொல்வதற்கு இன்னும் வழி பிறக்கவில்லை.

இந்தியாவிலும் இந்த தொற்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டிருக்கும் இந்தியாவில் கொரோனா தினமும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

இதனால் தொற்று பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தை இந்தியா நேற்று முன்தினமே பிடித்து விட்டது. பலி எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவில் நேற்று முன்தினம் காலை வரையிலான 24 மணி நேரத்தில் முதல் முறையாக 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இந்த கொடிய எண்ணிக்கை நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்துள்ளது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 90 ஆயிரத்து 802 பேர் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து 4 ஆயிரத்து 613 ஆக அதிகரித்து உள்ளது.

நாட்டில் இவ்வாறு அசுர வேகத்தில் கொரோனா பரவி வருவது மக்களையும், அரசுகளையும் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நாட்டின் மொத்த எண்ணிக்கை இவ்வாறு இருக்க கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் மொத்த பாதிப்பு 5 லட்சத்தை கடந்து விட்டது. நேற்று காலை நிலவரப்படி அங்கு மொத்தம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 493 பேர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர்.

எனினும் கடந்த 12 நாளாக தொடர்ந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தினசரி எண்ணிக்கையை பெற்று வந்த ஆந்திரா, நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 8,368 பேர் என்ற நிலைக்கு இறங்கி உள்ளது. அதேநேரம் நேற்று முன்தினம் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள் சரிவடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அங்கு கொரோனாவுக்கு மேலும் 70 பேர் பலியாகியுள்ளனர். எனினும் மாநிலத்தின் இறப்பு விகிதம் 0.89 ஆகவே நீடிப்பது ஆறுதலை அளித்து இருக்கிறது.

இதைப்போல நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 1,016 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 71 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. எனினும் நாட்டின் சாவு விகிதம் 1.70 என்ற நிலையிலேயே நீடிக்கிறது.

புதிதாக ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கையில் அதிகபட்சமாக மராட்டியத்தை சேர்ந்தவர்கள் 328 பேர் ஆவர். இதைப்போல கர்நாடகா (95), தமிழகம் (88), உத்தரபிரதேசம் (77), ஆந்திரா (70), பஞ்சாப் (54), மேற்கு வங்காளம் (52), டெல்லி, மத்திய பிரதேசத்தில் தலா 29, அரியானா (25), சத்தீஷ்கார் (24), புதுச்சேரி (16) ஆகிய மாநிலத்தவர்களும் அடங்கி உள்ளனர்.

இது மட்டுமின்றி பீகார் மற்றும் ராஜஸ்தானில் தலா 15 பேர், குஜராத் மற்றும் காஷ்மீரில் தலா 14 பேர், உத்தரகாண்டில் 11, கேரளாவில் 10, தெலுங்கானாவில் 9, அசாம், ஒடிசாவில் தலா 8, ஜார்கண்ட், கோவாவில் தலா 7, திரிபுராவில் 5, சண்டிகர், மணிப்பூரில் தலா 2, இமாசல பிரதேசம், மேகாலயாவில் தலா ஒருவர் என பெரும்பாலான மாநிலங்களும் சாவு எண்ணிக்கையை கொண்டுள்ளன.

இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 50 ஆயிரத்து 429 ஆக அதிகரித்து உள்ளது. மொத்த எண்ணிக்கையில் இது 77.30 சதவீதம் ஆகும். நேற்று காலை நிலவரப்படி 8,82,542 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பட்டியலில் அதிகபட்சமாக ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோயை வென்றுள்ளனர். அடுத்ததாக கர்நாடகாவில் 9,575, மராட்டியத்தில் 7,826, தமிழகத்தில் 5,820, உத்தரபிரதேசத்தில் 4,779 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக கொரோனாவை வென்றவர்கள் பட்டியலில் இந்த 5 மாநிலங்கள் மட்டுமே 57 சதவீத எண்ணிக்கையை பெற்றுள்ளன. அதேநேரம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையிலும் இந்த 5 மாநிலங்களே 60 சதவீத எண்ணிக்கையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கி விடடது. நேற்று காலை 8 மணி வரை 4 கோடியே 95 லட்சத்து 51 ஆயிரத்து 507 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்க மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.


Next Story