கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம்; செப்டம்பரில் 1.70% ஆக குறைவு
நாட்டில் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்துடன் ஒப்பிடும்பொழுது, 2.15% விகிதத்தில் இருந்து செப்டம்பரில் 1.70% என்ற விகிதத்திற்கு குறைந்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 802 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 80 ஆயிரத்து 423 ஆக உயர்ந்தது. இது மத்திய மற்றும் மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தவிர, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. கொரோனாவுக்கு 1,133 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் இன்று காணொலி காட்சி வழியே பேசும்பொழுது, கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பு விகிதம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்துடன் ஒப்பிடும்பொழுது, 2.15% விகிதத்தில் இருந்து 1.70% என்ற விகிதத்திற்கு குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.
இதேபோன்று நாட்டில் உள்ள 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்புகளே ஏற்பட்டு உள்ளன. இந்தியாவில் மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய 5 மாநிலங்கள் 70% அளவுக்கு உயிரிழப்புகளை கொண்டுள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story