கங்கனா ரணாவத் அலுவலகம் இடிப்பு: மும்பை மாநகராட்சி விளம்பரத்தை தேடி கொடுத்துள்ளது - சரத்பவார்


கங்கனா ரணாவத் அலுவலகம் இடிப்பு: மும்பை மாநகராட்சி விளம்பரத்தை தேடி கொடுத்துள்ளது - சரத்பவார்
x
தினத்தந்தி 9 Sept 2020 7:22 PM IST (Updated: 9 Sept 2020 7:22 PM IST)
t-max-icont-min-icon

நடிகை கங்கனா ரணாவத் அலுவலகம் இடிப்பு தொடர்பாக மும்பை மாநகராட்சி தேவையில்லாத விளம்பரத்தை தேடி கொடுத்துள்ளது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலிஹில்லில் நடிகை கங்கனா ரணாவத், மாநகராட்சியின் ஒப்புதலை பெறாமல் அலுவலகத்தில் சில மாற்றங்களை செய்ததாக கூறி அவரது அலுவலகத்தில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. அவர் இல்லாத நேரத்தில் அந்த அலுவலகத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடித்தனர்.

இந்த நோட்டீசுக்கு எதிராக கங்கனா தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அலுவலகத்தை இடிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியதாவது:

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்தது, அவருக்கு தேவையில்லாத விளம்பரத்தை மும்பை மாநகராட்சி தேடி கொடுத்துள்ளது. அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவத்தை மீடியாக்கள் பெரிதுபடுத்தியுள்ளன. ஆனால் இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்திருக்க வேண்டும்.

மும்பையில் ஏராளமான சட்டவிரோத கட்டமைப்புகள் உள்ளன. தேவையில்லாமல், இந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம், ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பார்கள்.

தற்போது எழுந்துள்ள சர்ச்சை பின்னணியில், நடவடிக்கையில் ஈடுபட்டது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், மும்பை மாநகராட்சிக்கு சொந்த காரணங்கள் மற்றும் விதிகள் உண்டு. அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story