நாட்டில் அதிகரிக்கும் போதை பொருள் கடத்தல் கலாசாரம்; டெல்லியில் ரூ.90 கோடி போதை பொருள் பறிமுதல்


நாட்டில் அதிகரிக்கும் போதை பொருள் கடத்தல் கலாசாரம்; டெல்லியில் ரூ.90 கோடி போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Sept 2020 11:43 PM IST (Updated: 11 Sept 2020 11:43 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ரூ.90 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச கடத்தல்காரர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் போதை பொருள் கடத்தல் பற்றி கிடைத்த தகவலை தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சர்வதேச போதை பொருள் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் இருந்து 23 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற விலை உயர்ந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.90 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் வழியே இந்த போதை பொருள் கடத்தி வரப்பட்டு உள்ளது.

நாட்டில் சமீப காலங்களாக போதை பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.  கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 30 கிலோ தங்க கடத்தல், சமீபத்தில் பெங்களூருவில் போதை பொருள் பயன்பாடு, கேரளாவின் திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 500 கிலோ போதை பொருள் கடத்தல் மற்றும் பறிமுதல், தொடர்ந்து கேரளாவில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்து 4.3 கிலோ தங்கம் பறிமுதல் என தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அதனுடன், சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய துணிகள் கடத்தப்பட்டு அவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி விசாரணை நடந்து வருகிறது.

கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் கால்கி பகுதியில், பெங்களூரு நகர மத்திய பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 1,350 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இந்நிலையில், டெல்லியில் ரூ.90 கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.  கொரோனா பரவலால் அமலான ஊரடங்கால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி, பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், நாட்டில் சமீப காலங்களாக போதை பொருள் கடத்தல் கலாசாரம் ஆனது தடையின்றி நடந்து வருகிறது.

Next Story