டெல்லியில் உயர்மட்ட கூட்டம்: லடாக் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு; முப்படை தளபதிகள் பங்கேற்பு


டெல்லியில் உயர்மட்ட கூட்டம்:  லடாக் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு; முப்படை தளபதிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Sept 2020 3:52 AM IST (Updated: 12 Sept 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

லடாக் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு நடத்தினார். இதில் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.

புதுடெல்லி,

லடாக்கின் கிழக்கு எல்லையில் பல பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இந்திய-சீன படைகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் முதல் நீடித்து வரும் இந்த பிரச்சினை இன்னும் ஓயவில்லை.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அங்கு அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதன் உச்சக்கட்டமாக இரு நாட்டு ராணுவ மந்திரிகள் மற்றும் வெளியுறவு மந்திரிகளும் ரஷியாவில் சந்தித்து பேசி உள்ளனர். இதில் இறுதியாக நடந்த வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பில், எல்லையில் அமைதியை ஏற்படுத்த 5 அம்ச திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இருநாடுகளும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டன.

அதேநேரம் லடாக் எல்லையில் இருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுக்கிறது. இது தொடர்பாக இந்தியா தொடர்ந்து எடுத்துரைத்தும் அங்குள்ள பங்கோங்சோ ஏரியின் வடக்கு கரையில் பல பகுதிகளில் சீன ராணுவம் படைகளை குவித்து வருகிறது.

இதற்கு சற்றும் சளைக்காத வகையில் இந்தியாவும் ஏரியின் தென்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் படைகளை குவித்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக உள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் லடாக் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக நடந்த உயர்மட்ட கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் மற்றும் ராணுவ அமைச்சக மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் லடாக்கில் தற்போது நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகள் ராணுவ மந்திரிக்கு விரிவாக எடுத்துக் கூறினர். பின்னர் லடாக்கில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே லடாக் எல்லையில் அமைதி ஏற்படுத்துவதற்காக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்றும் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்தியில் ராணுவ மந்திரி எல்லை நிலவரம் குறித்து ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தியா-சீனா இடையே 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தை அடுத்த வார தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ தலைமையகத்தில் நேற்று மூத்த அதிகாரிகளை சந்தித்த ராணுவ தளபதி நரவனே, இந்த 5 அம்ச திட்டம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

Next Story