இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை தகவல்


இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 13 Sept 2020 8:53 AM IST (Updated: 13 Sept 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நேற்றைய நிலவரப்படி புதிய உச்சமாக 97,570 பேர் இந்தியாவில் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 46 லட்சத்து 59 ஆயிரத்து 984 ஆக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அதேநேரம் இந்தியாவின் தினசரி பலி எண்ணிக்கை ஏறத்தாழ 1,200 என்ற அளவில்தான் இருப்பது ஆறுதலை அளிக்கிறது. இதன் மூலம் நாட்டின் பலி சதவீதம் 1.66 என்ற அளவிலேயே நீடிக்கிறது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை குணமடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்து 24 ஆயிரத்து 196 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கடந்த மே மாதம் 50,000 ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 36 லட்சமாக அதிகரித்துள்ளது.

தினந்தோறும் அதிகபட்சமாக 70,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 மடங்கு அதிகமாக உள்ளது.

தினந்தோறும் செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தொற்று கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story