கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை வெளியீடு
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கடந்த மே மாதம் 50,000 ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 36 லட்சமாக அதிகரித்துள்ளது.
தினந்தோறும் செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தொற்று கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-
* குணமடைந்தவர்கள் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க அறிவுரை வழங்க வேண்டும்.
* மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும்.
* யோகாசனம், பிராணயாமா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
* சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story