மராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடக்கிறது; உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடந்து கொண்டு இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு, கங்கனா ரணாவத் விவகாரத்தை கையாண்ட விதம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மராட்டிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
என்ன அரசியல் புயல்கள் வந்தாலும், அதை நான் எதிர்கொள்வேன். கொரோனா வைரசுடனும் போராடுவேன். அரசியலுக்கு பதில் அளிக்க நான் முதல்-மந்திரி என்ற முகமூடியை கழற்ற வேண்டி உள்ளது. நான் பேசாமல் இருப்பதால், என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தம் இல்லை. கொரோனா தவிர புயல், வெள்ளப்பாதிப்புகளை மாநில நிர்வாகம் திறமையாக கையாண்டது.
கொரோனா வைரஸ் தற்போது மாநிலத்தில் ஊரக பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. எனினும் தொற்றில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். தற்போது உள்ள சூழலில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கூட்டத்தை தவிர்ப்பது தான் சிறந்த வழி. பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது, பொதுமக்கள் பேசவேண்டாம். நேருக்கு நேராக சந்திப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மராட்டியத்தை இழிவுபடுத்தவும், அவதூறு ஏற்படுத்தவும் சதித்திட்டம் நடந்து வருகிறது.
வருகிற 15-ந் தேதி முதல், “எனது குடும்பம், எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் முழு மனதுடன் ஆதரவளிக்காமல் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியாது. மராத்தா இடஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்து இருப்பது எதிர்பாராதது. மராத்தா மக்களுக்கு நீதி கிடைக்க அரசு அவர்களுடன் உறுதியாக நிற்கும். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசுடனும் பேசி உள்ளேன். நான் பொதுவெளியில் செல்லவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். தொழில்நுட்பம் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொரோனா பிரச்சினை குறித்து ஆய்வு செய்து வருகிறேன். அது குறித்த உத்தரவுகளையும் பிறப்பிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் பேசினார்.
Related Tags :
Next Story