கொள்ளையடிக்க சென்ற வீட்டில் தூங்கிய திருடன் குறட்டை சத்தத்தால் சிக்கினான்


கொள்ளையடிக்க சென்ற வீட்டில் தூங்கிய திருடன் குறட்டை சத்தத்தால் சிக்கினான்
x
தினத்தந்தி 14 Sept 2020 2:04 AM IST (Updated: 14 Sept 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் தூங்கிய திருடன் குறட்டை ஒலி எழுப்பி சிக்கி கொண்டான்.

நகரி,

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் கோகவரத்தில் பெட்ரோல் பங்கு வைத்திருப்பவர் சக்திவெங்கட ரெட்டி. நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் பங்கில் வசூலான பணத்தை ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சக்திவெங்கட ரெட்டி வந்தார். இதனை அறிந்த மர்மநபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்தார். சக்திவெங்கடரெட்டி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, நைசாக வீட்டிற்குள் புகுந்த அந்த நபர் அங்குள்ள கட்டில் அடியில் படுத்துக்கொண்டார்.

சக்திவெங்கட ரெட்டி தூங்கியவுடன் பணத்தை கொள்ளையடித்து செல்ல அந்த திருடன் திட்டமிட்டிருந்தான்.. ஆனால் பெட்ரோல் பங்கு உரிமையாளர் நள்ளிரவு 1 மணி வரை அமர்ந்து வரவு-செலவு கணக்கை பார்த்துள்ளார். ஆனால் அதற்குள் திருடன் குறட்டை விட்டபடி தூங்கி விட்டார்.

குறட்டை சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த சக்திவெங்கடரெட்டி, நைசாக கதவை வெளிப்புறமாக பூட்டினார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட முயன்ற வாலிபர் சூரிபாபுவை கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் பெட்ரோல் பங்கு உரிமையாளருக்கு நன்கு அறிமுகமானவர் என்பதும், அத்தியாவசிய தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் திருட முயன்றதும் தெரியவந்தது.

Next Story