எல்லையை காக்கும் வீரர்களுக்கு பின்னால் நாடு ஒன்றுபட்டு நிற்கும் செய்தியை நாடாளுமன்றம் உறுதி செய்யும்; பிரதமர் மோடி நம்பிக்கை


எல்லையை காக்கும் வீரர்களுக்கு பின்னால் நாடு ஒன்றுபட்டு நிற்கும் செய்தியை நாடாளுமன்றம் உறுதி செய்யும்; பிரதமர் மோடி நம்பிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2020 11:45 PM GMT (Updated: 2020-09-15T01:52:36+05:30)

எல்லையை பாதுகாக்கும் தீரமிக்க வீரர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கும் செய்தியை நாடாளுமன்றம் உறுதி செய்யும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவை, மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லடாக் மோதல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது லடாக் மோதல் குறித்து அவர்கூறியதாவது:-

லடாக்கில் விரைவில் பனிக்காலம் தொடங்க இருக்கும் நிலையில், அந்த மலைப்பாங்கான பகுதிகளில் நமது வீரர்கள் மிகுந்த தீரத்துடன் தங்கள் கடமைகளை செய்து வருகின்றனர்.

இந்த நாடாளுமன்றத்துக்கும், குறிப்பாக இந்த கூட்டத்தொடருக்கும் ஒரு சிறப்பு கடமை உள்ளது. அதாவது, நமது வீரம் செறிந்த வீரர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கும் சேதியை நாடாளுமன்றமும், ஒவ்வொரு உறுப்பினரும், ஒரே குரலாக, ஒரே உணர்வுடன், ஒரே உறுதிப்பாட்டுடன் வலிமையாக வெளிப்படுத்த வேண்டும்.

இந்த செய்தியை நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் வழியாக நாடு தெரிவிக்கிறது. நமது வீரர்களுக்கு பின்னால் நாடாளுமன்றம் இருக்கிறது என்ற இந்த வலிமையான செய்தியை நாடாளுமன்றம் ஒரே குரலில் உறுதியாக தெரிவிக்கும் என நான் நம்புகிறேன்.

நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், சிறப்பான சூழலில் இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் எம்.பி.க்கள் தங்கள் கடமையை சிறப்பாக மேற்கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இரு அவைகளுக்கான நேரம் மற்றும் வார இறுதி நாட்களில்கூட நாடாளுமன்றத்தை நடத்துவது உள்ளிட்ட முடிவுகளை எம்.பி.க்கள் வரவேற்றுள்ளனர்.

கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவார்கள். தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை எந்த வித அலட்சியமும் கூடாது.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story