பிரேசிலை பின்னுக்கு தள்ளியது; கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்
கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. அதேநேரம் நாடு முழுவதும் புதிதாக 92 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பரவலின் வீச்சு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக எடுத்து வரும் நிலையில், தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிறந்த சிகிச்சையும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 77 ஆயிரத்து 512 பேர் கொரோனாவை வென்றுள்ளனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 80 ஆயிரத்து 107 ஆக அதிகரித்து விட்டது.
இது மொத்த எண்ணிக்கையில் 78 சதவீதம் ஆகும். மேலும் குணமடைந்தவர் மற்றும் சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கைக்கு இடையேயான வேறுபாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 9,86,598 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு 37.80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்ததன் மூலம், உலக அளவில் தொற்றில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது.
இந்தியாவை தொடர்ந்து பிரரேசிலில் 37 லட்சத்து 23 ஆயிரத்து 206 பேரும், அமெரிக்காவில் 24 லட்சத்து 51 ஆயிரத்து 406 பேரும் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 92 ஆயிரத்து 071 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்து 46 ஆயிரத்து 427 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் பாதிப்பு விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.
இதைப்போல கொரோனாவின் வீரியத்துக்கு மேலும் 1,136 பேர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கையும் 79 ஆயிரத்து 722 ஆகி உள்ளது. எனினும் இந்தியாவின் சாவு விகிதம் 1.64 என்ற அளவிலேயே இருக்கிறது. புதிதாக உயிரிழப்புகளை சந்தித்துள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 416 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதைப்போல குணமடைந்தோரில் 60 சதவீதத்தினரும் இந்த மாநிலங்களையே சேர்ந்தவர்கள் ஆவர்.
இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியே 72 லட்சத்து 39 ஆயிரத்து 428 ஆக அதிகரித்து இருக்கிறது.
Related Tags :
Next Story