‘நீட்’ தேர்வை ரத்து செய்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும்; நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேச்சு


‘நீட்’ தேர்வை ரத்து செய்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும்; நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேச்சு
x
தினத்தந்தி 15 Sept 2020 4:25 AM IST (Updated: 15 Sept 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை ரத்து செய்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று ‘நீட்’ சம்பந்தமான ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு பதிலாக நேரமில்லா நேரத்தில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வியை பாதிக்கும் ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வினால் தமிழகத்தை சேர்ந்த 12 கிராமப்புற மாணவர்கள் உயிர் இழந்துள்ள நிகழ்வை மிகுந்த துயரத்துடனும், வலியுடனும் இந்திய அரசின் கவனத்திற்கும், மக்களவையின் கவனத்திற்கும் தெரிவிக்கிறேன்.

தமிழகத்தின் 12-ம் வகுப்பு மாணவர்கள், மாநில அரசின் பாடத்திட்டத்தின்படி தேர்வு பெற்றுள்ள நிலையில், ‘நீட்’ தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ‘நீட்’ தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்வதால் மிகுந்த மன உளைச்சலுக்கும், சிரமங்களுக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுகளை நடத்தி வரும் தேசிய தேர்வுகள் முகமை அனைத்து இந்திய அளவில் தேர்வுகளை நடத்தி வருவதால், மாநில பாடத்திட்டங்களை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, மத்திய அரசு ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Next Story