இந்திய தலைவர்களை உளவு பார்க்கும் சீனா: நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்


இந்திய தலைவர்களை உளவு பார்க்கும் சீனா: நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Sept 2020 1:58 PM IST (Updated: 15 Sept 2020 1:58 PM IST)
t-max-icont-min-icon

இந்திய தலைவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை சீனா கண்காணிக்கும் தகவல் வெளியாகி உள்ளதை தொடர்ந்து, நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, இந்திய தலைவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை சீனா கண்காணித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சென்சென் நகரத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் சென்குவா எனப்படும் நிறுவனம் மூலம் இந்திய தலைவர்கள், நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் டிஜிட்டல் பக்கங்களை உளவு பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சீன உளவுத்துறையின் இந்த கண்காணிப்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், அவர்களது குடும்பத்தினர் என நாட்டின் ஆட்சி வட்டாரங்களில் உள்ளவர்கள் இடம்பெற்று உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டு உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய தலைவர்கள் மீதான சீனாவின் டிஜிட்டல் கண்காணிப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. இதை நாங்கள் சந்தேகமின்றி கண்டிக்கிறோம். அரசின் கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்த இந்த நிறுவனத்தை சீனா பயன்படுத்தி உள்ளதா? இதை அரசு விசாரித்து நாட்டுக்கு உறுதிப்படுத்துமா? இந்த தகவல் உண்மை என்றால், மோடி அரசுக்கு இந்த பிரச்சினையின் தீவிரம் தெரியுமா?

நமது மூலோபாய நலன்களை பாதுகாப்பதற்கு இந்த அரசு மீண்டும் மீண்டும் தவறுவது ஏன்? இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து சீனாவை தடுப்பதற்கு தெளிவான ஒரு செய்தி அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு ரந்தீப் சுர்ஜிவாலா கூறியிருந்தார்.

மேலும் சீனாவின் கண்காணிப்பு தொடர்பான செய்தியையும் அவர் அதில் இணைத்திருந்தார்.

இதைப்போல மக்களவையின் காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கூறுகையில், ‘நாட்டின் சைபர் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும். ஏனெனில் சீனாவை போன்ற ஒரு நாட்டுடன் நாம் மோதும்போது, வெறும் நிலம் மட்டுமின்றி கடல், வான்வெளி மற்றும் சைபர் வெளியிலும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தூங்கிக்கொண்டு இருக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.

சீன ஏஜென்சிகளால் சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் மத்திய அரசின் கொள்கையை கையாளவோ, ராணுவம் போன்ற முக்கியமான துறைகளை பற்றிய கூடுதல் தகவல்களை பெறவோ பயன்படுத்தவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறிய கோகாய், இதை வருகிற நாட்களில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Next Story