ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
ஊரடங்கால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி அஷ்வினி சவுபே நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்ச் 25 முதல் மே 31-ந்தேதி வரையிலான ஊரடங்கு கால கட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் ஊரடங்குக்கு பிந்தைய காலகட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் சீரான அதிகரிப்பை காட்டி உள்ளது.
நகர்ப்புறங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் தொற்றுகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
நாட்டில் 10 லட்சம் பேரில் 3,328 பேருக்கு தொற்று, 55 பேர் இறப்பு என்பது, உலகிலேயே மிக குறைவான ஒன்றாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான பிரத்யேக ஆஸ்பத்திரி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவதற்கு, தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையை சுகாதார அமைச்சகம் பின்பற்றுகிறது. நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்பார்க்கப்படும் தொற்று பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தல், ஆக்சிஜன் ஆதரவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை தேவையான அளவில் அமைப்பதற்கு திட்டமிடுமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தற்போது எந்தவொரு சூழலுக்கும், போதுமான படுக்கைகள் உள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசு நடத்துகிற பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை பற்றிய தரவுகள் மையமாக பராமரிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தளத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கிய தகவல்கள்படி, செப்டம்பர் 14-ந்தேதி நிலவரப்படி, 62 ஆயிரத்து 979 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 32 ஆயிரத்து 862 வென்டிலேட்டர்கள் உள்ளன. தேவையான வென்டி லேட்டர்களின் எண்ணிக்கையை தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அவர்களுக்கு வினியோகிக்கப்படும்.
இதுவரையில் மாநிலங்களுக்கு 32 ஆயிரத்து 109 வென்டிலேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 20 ஆயிரத்து 916 வென்டிலேட்டர்கள், ஆஸ்பத்திரிகளில் நிறுவப்பட்டுள்ளன.
பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து வென்டிலேட்டர்கள் வழங்குவதற்காக ரூ.898.93 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பாரத் மின்னணு நிறுவனம் 30 ஆயிரம் தீவிர சிகிச்சை பிரிவு வென்டிலேட்டடர்களை வினியோகித்து நிறுவுவதற்கு சுகாதார அமைச்சகம் ஆர்டர் வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தொற்றுநோயின் போக்கு, அவை முன்வைக்கும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு வென்டிலேட்டர்கள் ஒதுக்கப்படுவதால், அனைத்து மாநிலங்களும் சம விகிதத்தில் பலன் அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story