கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள்; மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்
லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொடுக்கப்படுவதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்று தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கொரோனாவை குணப்படுத்துவதாக எந்தவித குறிப்பிட்ட ஆன்டிவைரல் மருந்தும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காய்ச்சல், இருமல் போன்ற நோய்களுக்கான சிகிச்சையும், ஆக்சிஜன் சிகிச்சை போன்றவையுமே முக்கிய சிகிச்சை முறைகளாக உள்ளன.
லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பாளர்களுக்கு நாம் மறுஆக்கம் செய்யப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துகிறோம். வரையறுக்கப்பட்ட அறிவியல் ஆதாரத்துடன் அதேநேரம் நாடு முழுவதும் பிற வியாதிகளுக்கு நல்ல பாதுகாப்பு அம்சங்களுடன் பரவலான பயன்பாட்டில் இந்த மாத்திரைகள் உள்ளன.
எனவே இந்த மாத்திரைகளின் தயாரிப்பை மருந்தகத்துறை அதிகரித்து உள்ளது. கடந்த 11-ந் தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 10.84 கோடி மாத்திரைகளை சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ளது. இதைப்போல 140-க்கும் அதிகமான நாடுகளுக்கும் இந்தியா இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இதைப்போல தீவிர தொற்று கொண்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர், டோசிலிசுமாப், கான்வலசென்ட் பிளாஸ்மா போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பல பரிசோதனை சிகிச்சைகளுக்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் மறு ஆக்கம் செய்யப்பட்ட 13 மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அஸ்வகந்தா, குடுச்சி, பிப்பாலி போன்ற ஆயுர்வேத மருந்துகளை பரிசோதிக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அரசின் ஆதரவை பெற்றுள்ளன. அவை பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இதில் 3 தடுப்பூசிகள் மேம்பட்ட பரிசோதனை கட்டங்களான 1 முதல் 3 கட்ட பரிசோதனைகளில் உள்ளன. 4-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் இன்னும் மேம்பட்ட பரிசோதனைகளில் உள்ளன.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் 38 ஆயிரம் கொரோனா இறப்புகளையும், 29 லட்சம் பாதிப்புகளையும் அரசு தடுத்து உள்ளது. இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.
Related Tags :
Next Story