இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்தது புதிய உச்சமாக மேலும் 97 ஆயிரம் பேருக்கு தொற்று


இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்தது புதிய உச்சமாக மேலும் 97 ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 17 Sep 2020 11:30 PM GMT (Updated: 2020-09-18T04:38:11+05:30)

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 கோடியை கடந்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 கோடியை கடந்து உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 97 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதியாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.

மனித குலத்துக்கு மாபெரும் சோதனை காலமாக மாறியிருக்கிறது, இந்த கொரோனா பெருந்தொற்று காலம். கண்ணுக்கு தெரியாத அந்த வைரசுடன் போராடுவதிலேயே உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பணத்தையும், பலத்தையும் பயன்படுத்தி வருகின்றன. எனினும் தொற்றில் இருந்து மனிதக்குலம் மீளும் அந்த நாள் விடியாமலே இருக்கிறது.

இதில் இந்தியாவின் நிலைமையும் மோசமாகவே உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் 2-வது இடத்தில் நீடிக்கும் இந்தியா, தொடர்ந்து புதிய நோயாளிகளை அடையாளம் கண்டு வருகிறது. அதுவும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தொற்று புதிய உச்சம் தொட்டு இருக்கிறது.

இந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 97 ஆயிரத்து 894 பேர் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இவர்களையும் சேர்த்து நாட்டின் மொத்த பாதிப்பு 51 லட்சத்து 18 ஆயிரத்து 253 ஆக உயர்ந்து விட்டது. ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அரசுகளுக்கும், மக்களுக்கும் மிகப்பெரும் அச்சத்தை கொடுத்து உள்ளன.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,132 உயிர்களை கொரோனா தொற்று காவு கொண்டிருக்கிறது. இதனுடன் மொத்த பலி எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 ஆக அதிகரித்து உள்ளது. எனினும் நாட்டின் பலி விகிதம் 1.63 சதவீதமாகத்தான் உள்ளது.

உயிரிழந்த 1,132 பேரில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 474 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். இது 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். அடுத்ததாக உத்தரபிரதேசம் (86), பஞ்சாப் (78), ஆந்திரா (64), மேற்கு வங்காளம் (61) ஆகிய மாநிலங்கள் கணிசமான கொரோனா பலியை பெற்றுள்ளன.

இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் மட்டுமே 11 லட்சத்து 36 ஆயிரத்து 613 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 கோடியை கடந்து விட்டது. நேற்று காலை நிலவரப்படி 6 கோடியே 5 லட்சத்து 65 ஆயிரத்து 728 பரிசோதனைகள் நடந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து விட்டது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் (82,961) குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனாவை வென்றவர் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்து 25 ஆயிரத்து 79 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதமும் 78.64 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 10 லட்சத்தை கடந்தது. நேற்று காலை வரை 10 லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 19.73 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறும் நோயாளிகளில் 48.45 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இத்துடன் தமிழகம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களையும் சேர்த்தால் 60 சதவீத நோயாளிகள் இந்த 5 மாநிலங்களிலேயே உள்ளனர்.

புதிதாக குணமடைந்தவர்களில் 17,559 பேர் மராட்டியத்தையும், 19,845 பேர் ஆந்திராவையும், 6,580 பேர் கர்நாடகாவையும், 6,476 பேர் உத்தரபிரதேசத்தையும், 5,768 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில் புதிதாக குணமடைந்தவர்களில் 57.1 சதவீதத்தினர் இந்த 5 மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story